டி20 உலகக்கோப்பை உலகக்கோப்பை நடத்தும் உரிமம் யாருக்கு..? ஐசிசி இன்று முக்கிய ஆலோசனை
7 August 2020, 2:15 pmகொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் தொடரை, அடுத்த ஆண்டு மீண்டும் நடத்த எங்களுக்கே உரிமையை வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியா ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், 2021ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கான உரிமையை இந்தியா ஏற்கனவே பெற்றுள்ளது. ஒருவேளை அடுத்த ஆண்டு நடத்தும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்டால், இந்தியா 2022ம் ஆண்டில் போட்டியை நடத்தும் உரிமையை பெறும்.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரை நடத்தும் இடம் குறித்து இறுதி செய்வதற்காக ஐசிசியின் ஆலோசனை கூட்டம் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடக்கும் 50 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.