மழையால் திசைமாறியதா வெற்றி…? சரியான நேரத்தில் விஸ்வரூபம் எடுத்த கேஎல் ராகுல் ; விமர்சனங்களுக்குப் பிறகு கொண்டாடும் ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
2 November 2022, 7:34 pm
Quick Share

வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. அடிலெய்டில் இன்று நடந்து வரும் 2வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த கேஎல் ராகுல், இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடினார். அவருடன் கோலியும் நின்று ஆடி ரன்களை குவித்தார். ராகுல் 50 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், கோலி கடைசி வரை நின்று அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.

இதனால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. கோலி 64 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ், சாண்டோ இணை அதிரடியாக விளையாடியது. லிட்டன் தாஸ் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால், வங்கதேச அணி பவர் பிளேவான 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை எடுத்தது.

7 ஓவர்கள் முடிவவில் 66 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆட்டம் எப்போது தொடங்கப்படும் என்று தெரியாத நிலையில், வங்கதேசம் மற்றும் இந்திய ரசிகர்கள் பெரும் குழப்பத்திலும், அச்சத்திலும் இருந்து வந்தனர்.

இந்த சூழலில், ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இலக்கும் 151ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், எஞ்சிய 9 ஓவர்களில் வங்கதேச அணி 85 ரன்கள் அடிக்க வேண்டி இருந்தது. ஆனால், வங்கதேச அணியால் 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது.

மழை பெய்வதற்கு முன்பாக முதல் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்த வங்கதேச அணி, மழைக்கு பிறகு 9 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒருவேளை மழை பெய்யாமலோ, அல்லாது தொடர்ந்து மழை பெய்திருந்தாலோ வங்கதேச அணி பக்கம் வெற்றி போயிருக்கும் என்று புலம்புகின்றனர் வங்கதேச அணியின் ரசிகர்கள்.

குறிப்பாக, மழைக்கு பிறகு போட்டி ஆரம்பித்த போது, லிட்டன் தாஸின் ரன் அவுட்டை கேஎல் ராகுல் சரியான நேரத்தில் எடுத்ததே வெற்றிக்கான காரணம் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

கடந்த சில போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் படுமோசமாக விமர்சித்து வந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் அசத்திய அவரை கொண்டாடி வருகின்றனர்.

Views: - 415

1

1