உலகக் கோப்பை போட்டியில் மட்டுமல்ல.. உலக மக்களின் மனங்களையும் வென்ற ஜப்பான் வீரர்கள் : பாராட்டிய FIFA!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 6:21 pm
Japan FIFA - Updatenews360
Quick Share

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் கத்தாரை எதிர்த்து ஈகுவேடார் அணி விளையாடியது. இதில் 2 – 0 என்ற கோல் கணக்கில் ஈகுவேடார் அணி வெற்றிபெற்றது.

இதனையடுத்து, பலம் பொருந்திய அர்ஜென்டினாவை சவூதி அரேபியா வீழ்த்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இதனையடுத்து கலீஃபா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஜாம்பவான் ஜெர்மனியை எதிர்த்து களமிறங்கியது ஜப்பான். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் ஜப்பான் வெற்றிபெற்று உலக கால்பந்து ரசிகர்களை திகைக்க வைத்திருக்கிறது.

இந்தப் போட்டி முடிவடைந்ததும், ஜப்பான் அணி வீரர்கள் தங்களது லாக்கர் ரூமை சுத்தம் செய்துவிட்டு சென்றிருக்கின்றனர். பொருட்களை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு, சிறப்பு பரிசு ஒன்றையும் அளித்திருக்கின்றனர் ஜப்பான் வீரர்கள். ஓரிகாமி எனப்படும் காகிதத்தை மடித்து உருவங்கள் செய்வதில் வல்லவர்களான ஜப்பானியர்கள் காகித பறவைகளை செய்து அறையில் வைத்துவிட்டு, குறிப்பு ஒன்றையும் விட்டுச் சென்றிருக்கின்றனர்.

இதனை கால்பந்து சம்மேளனமான FIFA பாராட்டியிருக்கிறது. இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் FIFA,”உலகக்கோப்பை போட்டியின் 4வது நாளில் ஜெர்மனிக்கு எதிரான வரலாற்று வெற்றிக்குப் பிறகு, ஜப்பான் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் தங்கள் குப்பைகளை சுத்தம் செய்தனர். அதே நேரத்தில் ஜப்பான் அணி வீரர்கள் கலீஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் தங்கள் உடை மாற்றும் அறையை சுத்தம் செய்துவிட்டு வெளியேறினர். நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இன்னொரு ட்வீட்டில் “ஜப்பான் வீரர்கள் விட்டுச்சென்றது இதை மட்டும்தான்” என குறிப்பிட்டு ஓரிகாமியில் செய்யப்பட்ட காகித பறவைகளின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறது FIFA. ஜப்பானியர்கள் எழுதிய குறிப்பில் ஜப்பானிய மற்றும் அரபி மொழிகளில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதனிடையே இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 714

0

0