மோதிரா மைதானமா? இல்லை நரேந்திர மோடி மைதானமா? : அரசு அளித்த விளக்கம்!

25 February 2021, 1:00 pm
Modi Ground- Updatenews360
Quick Share

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்குப் பெயர் மோதிரா மைதானமா அல்லது நரேந்திர மோடி மைதானமா என்பதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய மைதானமாகக் கட்டப்பட்டுள்ள மோதிரா மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியைக் காண சுமார் 50,000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் ஆட்டத்திற்கு முன்பாக இந்த மைதானத்தை இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் திறந்துவைத்தனர். அப்போது ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம் இது என்பதால் இந்த மைதானம் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரால் அழைக்கப்படும் என்றார்.

இதனால் இந்த மைதானத்தின் பெயர் திடீரென நரேந்திர மோடி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் குழப்பம் நிலவியது. இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வரான நிதின் படேல் அளித்துள்ள விடியோ பதிவில், “இந்த மைதானம் குஜராத் கிரிக்கெட் கூட்டமைப்பிற்குச் சொந்தமானது. இது எப்போதும் மோதிரா மைதானம் என்றே அறியப்படும். ஆனால் பழைய மைதானத்தை முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக மைதானம் கட்டப்பட வேண்டும் என்பது அப்போது குஜராத் கிரிக்கெட் கூட்டமைப்பிற்கும் தலைவராக இருந்த நரேந்திர மோடியின் யோசனை அது. தற்போது இந்த முழு விளையாட்டு வளாகத்தின் பெயரும் சர்தார் படேல் தான். அதில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தின் பெயர் மட்டும் நரேந்திர மோடி என அழைக்கப்படும்” என அதில் விளக்கம் அளித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய மைதானமாகக் கட்டப்பட்டுள்ள மோதிரா மைதானம் 63 ஏக்கர் நிலத்திற்கு மேல் பரவியுள்ளது. இதன் மொத்த இருக்கையின் எண்ணிக்கை 1,32,000 ஆகும். இதன் மூலம் தற்போது அதிக ரசிகர்களின் இருக்கையை (90,000) கொண்டுள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட மோதிரா மைதானம் மிகப்பெரியதாக அமைந்துள்ளது. மேலும் இதன் மொத்த சதுரடி சுமார் 2,38,714 ஆகும். இது 32 ஒலிம்பிக் அளவிலான கால்பந்தாட்ட களத்தை ஒன்று சேர்ப்பதற்குச் சமமாகும். மேலும் இந்த மைதானத்தில் செம்மண் மற்றும் கருப்பு மண் கொண்டு அமைக்கப்பட்ட மொத்தம் 11 பிட்ச்கள் உள்ளது.

Views: - 8

0

0