கொல்கத்தா வீரர்களை தொடர்ந்து சிஎஸ்கே உறுப்பினர்களுக்கும் கொரோனா பாசிடிவ்!

3 May 2021, 3:32 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணியின் மூன்று உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் தாக்கம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடரையும் சூழ்ந்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணியின் உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து செயல்பட்ட போதும், கொல்கத்தா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வருன் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று நடக்கவிருந்த போட்டி வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3 உறுப்பினர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசிவிசுவநாதன் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராக லட்சுமிபதி பாலாஜி மற்றும் பேருந்து தூய்மை பணியாளர் என மூன்று உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான சோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முடிவுகள் மாலை 4 மணி அளவில் வெளியாகும் என்றும் சிஎஸ்கே அணியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த நபர் கூறுகையில், “மற்ற அணிகள் மேற்கொண்ட சோதனை போல எங்கள் அணியினரும் சோதனை மேற்கொண்டுள்ளனர். தற்போது அந்த சோதனை முடிவுகள் எங்களிடம் இல்லை.

இந்த சோதனை முடிவுகள் மாலை 4 மணி அளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு எந்த வீரர் ஒருவருக்கு கொரோனா இருக்கின்றதா என்பது தெரியவரும். அதுவரை உறுதியாக கூற முடியாது” என்றார். டெல்லியில் நடந்த போட்டியில் கடந்த சனிக்கிழமையன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்றது. இந்நிலையில் நாளை மறுநாள் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்க இருக்கிறது. தற்போதைய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் பங்கேற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

Views: - 187

0

0

Leave a Reply