பட்டைய கிளப்பிய பராக்… மீண்டும் அதிர்ச்சி கொடுத்த கோலி.. சென், அஸ்வினால் மறுபடியும் முதலிடத்தில் ராஜஸ்தான்..!!

Author: Babu Lakshmanan
26 April 2022, 11:36 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரூ அணி போராடி தோல்வியடைந்தது.

புனேவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் டூபிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு முன்கள வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வந்த நிலையில், இளம் வீரர் ரியான் பராக் மட்டும் ரன்களை குவித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.

ரியான் பராக் மட்டும் 31 பந்துகளில் 56 ரன்கள் அவர் குவித்தார். பெங்களூரூ அணி தரப்பில் சிராஜ், ஹசில்வுட், ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரூ அணிக்கு கோலி இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். 10 பந்துகளை ஆடிய அவர் 9 ரன்னில் எடுத்திருந்த போது அவுட்டானார். இதைத் தொடர்ந்து, டூபிளசிஸ் (23), பட்டிதர் (16), மேக்ஸ்வெல் (6), என முன்னணி வீரர்கள் யாரும் தாக்குபிடிக்கவில்லை.

குல்தீப் சென் வேகத்திலும், அஸ்வினின் சுழலிலும் சிக்கிய பெங்களூரூ அணி 115 ரன்களுக்கு சுருண்டது. ராஜஸ்தான் அணி தரப்பில் குல்தீப் சென் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம், 29 ரன்னில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, 6வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

Views: - 1070

0

0