எழுச்சி பெறுமா பஞ்சாப், சென்னை அணிகள்..? இன்று ஐபிஎல் தொடரில் 2 போட்டிகள்..!

10 October 2020, 1:45 pm
Csk - kxip - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகளும், 2வது ஆட்டத்தில் சென்னை – பெங்களூரூ அணிகளும் மோதுகின்றன.

சார்ஜாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 21 போட்டிகள் முடிவடைந்து விட்டன. வார இறுதியான இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில், 6 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும், 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 4 இடத்தில் இருக்கும் கொல்கத்தாவும் மோதுகின்றன.

இந்த சீசனில் அதிர்ஷ்மில்லாத அணியாகவே பஞ்சாப் அணி பார்க்கப்படுகிறது. காரணம், தற்போது வரை இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களை கொண்டிருந்தாலும், பஞ்சாப் அணி கடைசி இடத்திலேயே உள்ளது. எனவே, இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில், அதிரடி நாயகன் கெயிலை இன்றைய போட்டியில் களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டியிலும் தோல்வியை சந்தித்தால், பிளே ஆஃப் கனவு அவ்வளவுதான்.

chris-gayle-andre-russell-updatenews360

5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி, கடந்த ஆட்டத்தில் சென்னையை தோற்கடித்த நம்பிக்கையில் இந்தப் போட்டியில் களமிறங்கும்.

இதேபோல, இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை – பெங்களூரூ அணிகள் மோதுகின்றன. 5 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரூ அணி 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஆனால், நாளுக்கு நாள் ஏமாற்றத்தை கொடுத்து வரும் சென்னை 6-ல் 2 வெற்றிகளை மட்டுமே 6வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூரூவை தோற்கடித்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.