உக்ரைன் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகத்!

28 February 2021, 9:11 pm
Vinesh - Updatenews360
Quick Share

உக்ரைனில் நடந்த மல்யுத்தப் போட்டியில் பெண்கள் 53 கிலோ கிராம் எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

உக்ரைனில் நடந்த மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான பெலாரஸைச் சேர்ந்த வெனேசாவை எதிர்கொண்டார். இதன் ஃபைனலில் சிறப்பாகச் செயல்பட்ட வினேஷ் போகத், முதலில் 4-0 என முன்னிலையிலிருந்தார். ஆனால் எழுச்சி பெற்ற வெனேசா 4 புள்ளிகள் பெற்று 4-4 எனச் சமன் செய்தார்.

பின் இடைவேளையின் போது 6-4 என முன்னிலை பெற்ற வினேஷ், போட்டியின் கடைசி 25 வினாடி இருந்த போது 10 – 8 என வலுவான முன்னிலை பெற்றார். இதன் பின் வெனேசாவின் முயற்சிகள் அனைத்தும் வீணாக வினேஷ் தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பின்பு முதல் முறையாகச் சர்வதேச அரங்கில் சாதித்து அசத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எஸ்ஏஐ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் பெண்கள் 53 கிலோ கிராம் எடைப் பிரிவில் நடந்த ஃபைனல் போட்டியில், உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான பெலாரசின் வெனேசாவை 10-8 என வீழ்த்தித் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வினேஷ், ருமேனியாவின் ஆனவை வீழ்த்தி ஃபைனலுக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க ஏற்கனவே வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார். தற்போது அடுத்ததாக ரோமில் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்க உள்ள தொடரிலும் வினேஷ் போகத் பங்கேற்க உள்ளார்.

Views: - 3

0

0