பாண்டிங் சாதனையை உடைத்து உலக சாதனை படைக்கக் காத்திருக்கும் ‘கிங்’ கோலி!

2 February 2021, 1:18 pm
virat kohli - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையைத் தகர்க்க இங்கிலாந்து தொடரில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய தொடரில் பாதியில் வெளியேறிய இந்திய கேப்டன் விராட் கோலியும் மீண்டும் இந்த தொடரில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் வரும் 5-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன் என்ற புது உலக சாதனை படைப்பார். ஒருவேளை இந்த போட்டியில் சதம் விளாசும் பட்சத்தில் அது கேப்டனாக சர்வதேச அரங்கில் கோலி அடிக்கும் 42வது சதமாகும். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனை படைப்பார் விராட் கோலி.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 28ஆவது சதமாக இது அமையும். தற்போது கோலி மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலா 41 சதங்களுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. மறுபுறம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின் இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவாகும். இந்த தொடரை வெற்றிகரமாக பிசிசிஐ நடத்தி முடிக்கும் பட்சத்தில், அடுத்ததாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த இது சிறந்த முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்துள்ள கேப்டன்கள் பட்டியல்:

விராட் கோலி (இந்தியா) – 41 சதங்கள் (188 போட்டிகள்)
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 41 சதங்கள் (324 போட்டிகள்)
கிரேம் ஸ்மித் (தென் ஆப்ரிக்கா) – 33 சதங்கள் (324 போட்டிகள்)
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) – 20 சதங்கள் (93 போட்டிகள்)
மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா) – 19 சதங்கள் (139 போட்டிகள்)
பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) – 19 சதங்கள் (172 போட்டிகள்)

Views: - 0

0

0