விரக்தி மேல் விரக்தி… டெஸ்ட் கேப்டன் பதவியையும் தூக்கிப்போட்ட கோலி… கடைசியாக தோனிக்கு சொன்ன நன்றி..!!

Author: Babu Lakshmanan
15 January 2022, 9:42 pm
Quick Share

சென்னை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார். கேப்டன் விவகாரத்தில் கோலிக்கும், பிசிசிஐக்கும் முரண்பாடான கருத்துக்களே நிலவி வந்தன. இதைத் தொடர்ந்து, டெஸ்ட் அணிக்கு மட்டும் அவர் கேப்டனாக செயல்பட்டு வந்தார். வெறும் டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக கோலி பங்கேற்ற முதல் தொடராக தென்னாப்ரிக்க தொடர் இருந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, 2வது போட்டியில் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை. அதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பின்னர், மீண்டும் வந்த கோலி 3வது போட்டியிலும் தோல்வியை தழுவினார். இதனால், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது. ஏற்கனவே, கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த கோலிக்கு இந்தத் தோல்வி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டனாக பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கடின உழைப்பு மற்றும் நம்பிக்கையை எப்போதும் இழந்ததில்லை. இந்த வாய்ப்பை கொடுத்த பிசிசிஐக்கும், சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். நீண்ட நாட்களாக கேப்டன் பதவியை வழங்கிய பிசிசிஐக்கு நன்றி.

இவை அனைத்துக்கும் மேலாக என்னிடம் கேப்டன் தகுதி இருப்பதை கண்டறிந்த தோனிக்குதான் முதல் வணக்கம், என தெரிவித்துள்ளார்.

Views: - 963

0

0