என் வாழ்நாளில் இதுக்காக மட்டும் விளையாடியதே கிடையாது: கோலி!

Author: Udhayakumar Raman
26 March 2021, 11:06 pm
Quick Share

தன் வாழ்நாளில் சதம் அடிப்பதற்கான தான் விளையாடியதே கிடையாது என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 336 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு கே எல் ராகுல் (108) சதம் அடித்துக் கைகொடுத்தார். இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (55), பென் ஸ்டோக்ஸ் (99), ஜானி பேர்ஸ்டோவ் (124) கைகொடுக்க, இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 337 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி தனது அதிக பட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டி புது வரலாறு படைத்தது. தவிர, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 1-1 எனச் சமன் செய்தது. இதற்கிடையில் இந்த தோல்விக்கு பின் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “நாங்கள் கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளோம் என நினைத்தோம். ஆனால் இந்த இலக்கை எட்ட இங்கிலாந்து அணி வழியைக் கண்டுபிடித்து 100 ரன்கள் பாட்னர்ஷிப் சேர்த்தது. ஜானி பேர்ஸ்டோவ் – ஸ்டோக்ஸ் பாட்னர்ஷிப் இடையில் ஒரு சில வாய்ப்புகளைத் தவறவிட்டோம்.

இருநாட்களுக்கு முன் இதே அளவிலான இலக்கை தடுக்க முடிந்தது. ஆனால் இன்றைய நாள் இங்கிலாந்து அணிக்குச் சொந்தமானது. பணி பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 300 ரன்கள் எட்டிய போது தேவையான அளவு எட்டிவிட்டோம் என்ற நினைப்பு இருந்தது. ஆனால் கூடுதலாக 36 ரன்கள் அடிக்க கைகொடுக்க இளம் வீரர்களுக்குத் தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். நான் என் வாழ்நாளில் எப்போதும் சதம் அடிப்பதற்காக மட்டும் விளையாடியது இல்லை. அதனால் தான் இந்த குறுகிய காலத்தில் இந்தளவு சதங்களை எட்ட முடிந்தது. அணியின் வெற்றி தான் மிகவும் முக்கியமானது. அணியின் வெற்றியில்லாமல் நான் சதம் அடித்தும் அது ஒன்றும் இல்லாததற்கு சமம்” என்றார்.

Views: - 170

0

0