ஐசிசி தரவரிசை: கோலி ‘டாப்’ சறுக்கிய பும்ரா: இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

31 March 2021, 9:07 pm
Quick Share

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நம்பர் -1 இடத்தில் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரை சதம் விளாசிய இந்திய கேப்டன் விராட் கோலி 870 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் -1 இடத்தில் நடிக்கிறார். இந்த தொடரில் பங்கேற்காத இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 690 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் உள்ளார். இதற்கிடையில் மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் 31வது இடத்தில் இருந்து 27வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஹர்திக் பாண்டியா தனது வாழ்நாள் சிறந்த இடமாக 42 வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் டாப் 100 வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் 9 இடங்கள் முன்னேறி 11வது இடத்தைப் பிடித்தார். கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது மீண்டும் தனது சிறந்த இடத்தை எட்டியுள்ளார் புவனேஸ்வர் குமார். இங்கிலாந்து தொடரில் அசத்திய சார்துல் தாகூரும் 93 ஆவது இடத்தில் இருந்து 80 வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆறாவது மற்றும் 5வது இடத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில் டாப்-10 இடத்தில் வேறு எந்த இந்திய வீரர்களும் இடம்பெறவில்லை. பவுலர்களுக்கான பட்டியலிலும் முதல் 10 இடங்களில் எந்த இந்தியர்களும் இடம்பெறவில்லை. ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலிலும் எந்த இந்திய வீரர்களும் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெறவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் உள்ளார். ஆல் ரவுண்டர் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் உள்ளனர். சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 5 வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் 7வது இடம் பிடித்துள்ளனர்.

Views: - 85

9

3