ரோஹித் ஸ்டெம்பிங் விஷயத்தில் இருந்த அக்கறை எங்களுக்கு எங்க போச்சு: விட்டு விளாசிய ஜோ ரூட்!

25 February 2021, 1:55 pm
Joe Root - Updatenews360
Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அம்பயரின் செயல்பாட்டில் பெரிய அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் மூன்றாவது அம்பயரின் முடிவு இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்தது. இது தனக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இந்திய துவக்க வீரராக சுப்மான் கில்லிற்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைப் பலமுறை ஆய்வு செய்தபின் மூன்றாவது அம்பயர் அவுட் இல்லை என அறிவித்தார். அதேபோல இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மாவிற்கு எழுப்பப்பட்ட ஸ்டெம்பிங் கேள்விக்கும் மூன்றாவது அம்பயர் பல ஆங்கிள்களில் ஆய்வு செய்து பின்னர் அதை நாட்- அவுட் என அறிவித்தார்.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்திற்குப் பின்பு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் ஐசிசியின் போட்டி நடுவரான ஸ்ரீநாத்திடம் இது தொடர்பாக நீண்ட நேரம் பேசியதையும் காணமுடிந்தது. இந்த போட்டியின் மூன்றாவது அம்பயராக செயல்பட்டவர் சாம்சுதீன். இந்த முதல் நாள் ஆட்டத்தின் போது இரண்டு விஷயங்களில் அவர் போதிய நேரம் எடுத்துக் கொள்ளாமல் அனைத்து விதமான அங்கங்களிலும் ஆய்வு செய்யாமலும் விரைவாக முடிவை அறிவித்தார். இதுதான் இந்த சர்ச்சைக்குரிய காரணமாக அமைந்தது.

இதுதொடர்பாக இங்கிலாந்து அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகியோர் அம்பயரின் தொடர்ச்சியான அடுத்தடுத்த முடிவுகள் குறித்த சிக்கல்களையும், சவால்களையும், முடிவு குறித்த ஆய்வைப்பற்றியும் போட்டி முடிந்த பின் நடுவரிடம் பேசினர். அம்பயர்களிடம் கேள்வி எழுப்ப கேப்டனுக்கு உரிமை உள்ளது என்பதைப் போட்டி நடுவர் ஒப்புக்கொண்டார்” என்றார்.

இதேபோல இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான கார்லே கூறுகையில், “நாங்கள் பேட்டிங் செய்த போது இங்கிலாந்து வீரர் ஜாக் லீச்சிற்கு இதே போன்ற ஒரு கேட்ச் பிடிக்கப்பட்டது. அதை ஐந்து, ஆறு ஆங்கிள்களில் அம்பயர் ஆய்வு செய்து முடிவு எடுத்தார். ஆனால் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஸ்டெம்பிங் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது அதை வெறும் ஒரே ஒரு ஆங்கிளில் இருந்து மட்டும் ஆய்வு செய்து அவர் தனது முடிவை உடனடியாக அறிவித்தார். இங்குதான் விரக்தி ஏற்பட்டது. இது போன்ற விஷயங்கள் அவுட்டா அல்லது நாட் அவுட்டா என்பது குறித்து நான் இங்குப் பேச விரும்பவில்லை. ஆனால் எனது அதிருப்தி என்பது இது முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்பது மட்டும்தான்” என்றார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடுநிலையான நியூட்ரல் அம்பயர்கள் என அறியப்படும் பிறநாட்டு அம்பயர்களை நிறுத்த முடியாமல் உள்ளூர் அம்பயர்களை பயன்படுத்தும் நிலை தற்போது உள்ளது. இது மிகப்பெரிய பேச்சு தளமாக தற்போது உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் எப்போதும் இருப்பதை விடக் கூடுதலாக ஒவ்வொரு அணிக்கும் ஒரு ரிவ்யூ வழங்கப்பட வேண்டுமெனவும் என்பதும் இந்த விவகாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சம்பவங்கள் இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக உருவாக்கி உள்ளது எனலாம்.

Views: - 6

0

0