அஸ்வினா? லியானா? தனது 800 விக்கெட் சாதனையைத் தகர்ப்பது யார்?: முரளிதரனே சொன்ன பதில்!

14 January 2021, 1:39 pm
Ashwin - Updatenews360
Quick Share

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 800 விக்கெட் என்ற சாதனையை அஸ்வின் மற்றும் லியான் இருவரில் யார் தகர்ப்பார்கள் என்ற கேள்விக்கு முரளிதரன் பதில் அளித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் எட்டமுடியாத உச்சமாக இலங்கையின் சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இவர் இந்த சாதனையைத் தனது கடைசி டெஸ்ட் போட்டியான கடந்த 2010 இல் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பிரக்யான் ஓஜாவை அவுட்டாக்கியதன் மூலம் எட்டினார்.

இவர் இந்த சாதனையை எட்டி சுமார் 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட இதுவரை இவரின் சாதனைக்கு அருகில் கூட ஒரு பவுலராலும் நெருங்கக்கூட முடியவில்லை. இவரைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் உள்ளார். ஆனால் இவருக்கும் முரளிதரனுக்குமான விக்கெட் வித்தியாசம் 92 விக்கெட்டுகளாக உள்ளது. இந்திய ஜாம்பவான் அனில் கும்ளே 619 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

தற்போதைய தலைமுறை டெஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்களில் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இதற்கிடையில் இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்டில் லியான் தனது 100ஆவது போட்டியில் பங்கேற்கவுள்ளார். இவர்கள் டெஸ்ட் அரங்கில் 377 மற்றும் 396 விக்கெட்டுகளுடன் அஸ்வின் மற்றும் லியான் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களாகத் திகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது 800 விக்கெட் என்ற சாதனையை டெஸ்ட் அரங்கில் அஸ்வின் மற்றும் லியான் ஆகியோரில் யார் தகர்ப்பார்கள் என இலங்கையின் முரளிதரனே தெரிவித்துள்ளார். இதுகுறித்து முரளிதரன் கூறுகையில்,“இனி புது பவுலர் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் வந்து 800 விக்கெட் வரை செல்வது கடினம். நாதன் லியான் தற்போது 400 விக்கெட்டுகளை நெருங்கியுள்ளார்.

ஆனால் அவர் இந்த சாதனையை நெருங்க இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அஸ்வினுக்கு வாய்ப்பு உள்ளது. அஸ்வின் மிகச்சிறந்த பவுலர். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய சிக்கலாக இருப்பது டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் தான். நான் கிரிக்கெட்டில் பங்கேற்ற நாட்களில் பேட்ஸ்மேன்கள் மிகவும் நுணுக்கமாக இருந்தனர், விக்கெட்டுகளும் பிளாட்டாக இருந்தது. ஆனால் தற்போது மூன்று நாட்களுக்குள் போட்டியை முடிக்க நினைக்கின்றனர்.

டி-20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் பவுலர்களை எதிர்த்துத் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொள்கின்றனர். அதனால் பந்துவீச்சில் வித்தியாசம் காட்ட வேண்டிய நிலை உள்ளது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதைச் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. தற்போதைய மாறுதல்கள் காரணமாகச் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் கைப்பற்றக் கடினமாகப் பாடுபட வேண்டிய நிலை உள்ளது” என்றார்.

Views: - 7

0

0