ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை பெறுவது யார்? ஏலம் இன்று தொடக்கம்… வெளியேறியது பிரபல நிறுவனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2022, 11:08 am
IPL - Updatenews360
Quick Share

2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளுக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது.

2023 முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை தொடர்பான இணைய வழி ஏலம் இன்று (ஜூன் 12) நடைபெறவுள்ளது.

இந்த ஏலத்தில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் போன்றவற்றுக்கான இந்தியா மற்றும் இதர நாடுகளுக்கான ஒளிபரப்பு உரிமை வழங்கப்படும்.

2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 74 ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதற்கடுத்த இரு ஆண்டுகளில் தலா 84 ஆட்டங்களை நடத்தவும் திட்டுமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 5 ஆண்டுகளில் 410 ஆட்டங்களை நடத்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதற்கான ஒளிபரப்பு உரிமை ஏலம் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா, இந்திய துணைக்கண்டத்திற்கான டிவி ஒளிபரப்பு (பேக்கேஜ் ‘ஏ’– ஒரு போட்டிக்கு ரூ. 49 கோடி), இந்திய துணைக்கண்டத்திற்கான டிஜிட்டல் உரிமம் (பேக்கேஜ் ‘பி’– ஒரு போட்டிக்கு ரூ.33 கோடி), ஒவ்வொரு சீசனிலும் தேர்வு செய்யப்பட்ட 18 போட்டிகளின் டிஜிட்டல் உரிமம் (பேக்கேஜ் ‘சி’– ஒரு போட்டிக்கு ரூ.11 கோடி), அன்னிய நாடுகளில் ஒளிபரப்பு உரிமம் (பேக்கேஜ் ‘டி’– ஒரு போட்டிக்கு ரூ.3 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் போல இல்லாமல் ஒவ்வொரு பிரிவிலும் ஆன்லைன் மூலம் அதிக ஏலம் கேட்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட உள்ளது. இதனால் பிசிசிஐ-க்கு ரூ. 45,000 கோடி வரை வருமானம் கிடைக்கலாம்.

ஐபிஎல் போட்டி முதல் 10 வருடங்களுக்கு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதற்கான உரிமையை ரூ. 8,200 கோடிக்குப் பெற்றது. 2017-இல் ஸ்டார் இந்தியா, ரூ. 16,347.5 கோடிக்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை அடுத்த ஐந்து வருடங்களுக்குப் (2018-22) பெற்றது.

இதனால் இம்முறையும் அதிகமான தொகைக்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையைப் பெற டிஸ்னி ஸ்டார், சோனி, ஸீ, வியாகாம், அமேசான், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இந்த ஏலப் போட்டியிலிருந்து அமேசான் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 1956

0

0