இந்தியாவில் பலிக்குமா இங்கிலாந்து சுழல் ஜாலம்: சச்சின் கணிப்பு!

4 February 2021, 10:04 pm
Quick Share

இந்திய மண்ணில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்களா என்பது குறித்து ஜாம்பவான் சச்சின் கணித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கிடையில் கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளரான கிரேம் ஸ்வான் மற்றும் மாண்டி பனேசர் ஆகியோர் பந்துவீச்சில் மிரட்டினர். அவர்களைப் போல தற்போது இடம்பெற்று உள்ளார்கள் சாதிக்க முடியுமா என இந்திய ஜாம்பவான் சச்சின் கணித்துள்ளார்.

இது குறித்து சச்சின் கூறுகையில், “2012ஆம் ஆண்டு இருந்த இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. அப்போது கிரேம் ஸ்வான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். அதேபோல பனேசரின் பவுலிங் ஸ்டைல் வித்தியாசமானதாக இருந்தது. பந்தை டாஸ் செய்யும் ஒரு சில பவுலர்களில் அவரும் ஒருவராக இருந்தார். அதேநேரம் பந்தை வேகமாக சுழலச் செய்வார். அதனால் இது தற்போதைய பவுலர்கள் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.

அவருடன் ஒப்பிடும் போது லீச் மிகவும் குறைந்த அளவிலான வேகத்திலேயே பந்து வீசுகிறார். எல்லா பந்துகளையும் ஒரே வேகத்திலும் லீச் வீசுகிறார். இதனால் அவரின் பந்துவீச்சில் வேகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை இதை பேட்ஸ்மேன் எளிதாக கணித்து விட நேரம் கிடைக்கும். ஆனால் அப்போது பனேசர் மற்றும் ஸ்வான் இதற்கு எந்த இடமும் கொடுக்கவில்லை. இதற்கிடையில் தற்போதைய தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

குறிப்பாக சுவிங் பவுலர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். போட்டியின் 15 ஓவர் முதல் 60 வரை பந்து ரிவர்ஸ் சுவிங்காகும் என்று கருதுகிறேன். அதனால் பேட்ஸ்மேனுக்கு அதற்கேற்ப செயல்பட நேரம் குறைவாக இருக்கும். இது பந்தின் மென்மையான தன்மையால் ஏற்படுவது. குறிப்பாக இதில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு கைகொடுக்கும். துவக்கத்தில் ஸ்டூவர்ட் பிராட் மிகவும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தவும், அதை அப்படியே ஸ்டோக்ஸ் தொடர முடியும். இங்கிலாந்து பந்துவீச்சை பொறுத்தவரை மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாக உள்ளது” என்றார்.

Views: - 0

0

0