காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்..!! பெற்றோர்கள் கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டு..

15 December 2019, 6:47 pm
Salem Police-UpdateNews360
Quick Share

சேலம்: சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் கூலி தொழிலாளியான இவரது மகன் மோகன் குமார் 22 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரின் மகள் தங்கமாரி 19 வயதுடைய இவர் இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தின் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து உள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய தங்கமாரி தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சேலம் வந்தார். பின்னர் அவர் தனது காதலன் மொபைல் குமாரை சந்தித்து பேசியுள்ளார்.

இதனையடுத்து சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள ஆறுபடையப்பன் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரு வீட்டாரின் பெற்றோரிடமும் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.