சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் செல்ல மறுத்த கொரோனா நோயாளிகள்.! திருவள்ளூரில் பரபரப்பு.!!
9 August 2020, 5:41 pmதிருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைக்க வந்த சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் செல்ல மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தள்ளேறிபாளையம், ராக்கம்பாளையம், வழுதிகைபேடு உள்ளிட்ட பகுதிகளில் 35க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்தி திருவள்ளூர் குன்னவலத்தில் உள்ள டிடி கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் மூலம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
ஒரு சில நோயாளிகள் தாங்கள் சிகிச்சைக்கு வர மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட தாங்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும் எனவே தங்களை சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும் அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் காவல்துறையினரின் உதவியுடன் அவர்களிடம் சமாதானம் மேற்கொண்டனர். பின்னர் சிகிச்சைக்கு வந்தவர்களை மட்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு டிடி கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பொதுமக்கள் வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவும் போதிய மருத்துவ உதவிகள் உணவு போன்றவை கிடைக்காது என்ற அச்சத்தில் வர மறுப்பதாகவும் வைரஸ் தொற்று நோயாளிகள் நல்லமுறையில் குணமாகி வீட்டுக்கு திரும்புவதாகவும் யாரும் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்