தந்தை ஸ்டெயிலை ஃபாலோ பண்ணும் மகன் : மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட மனு..!
14 November 2019, 9:17 pm
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், தனது தந்தையை போலவே அரசியலில் களமிறங்கும் வாய்ப்பை உதயநிதி பெறுகிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை மோசமடைந்த போது, அக்கட்சியின் தற்காலிக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். அந்த சமயத்தில் இருந்தே, படங்களில் நடிப்பதை விட, தந்தை ஸ்டாலினுக்கு பக்கபலமாக, அரசியல் களத்தில் குதித்தார் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து, அவருக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. பின்னர், தேர்தல்களில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த உதயநிதியை, மக்களவை தேர்தலில் திருச்சியில் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கான போட்டியில் உதயநிதி போட்டியிட விருப்ப மனுவை தி.நகர் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு கொடுத்துள்ளார்.
தற்போது, தி.மு.க. தலைவராக உள்ள ஸ்டாலின், முதன்முறையாக சென்னை மேயர் பதவி வகித்தார். இந்த நிலையில், தந்தையைப் போலவே, அவரது மகனான உதயநிதியையும் சென்னை மேயராக்க தி.மு.க.வினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு சீட் வழங்கப்படுமா..? இல்லை மறுக்கப்படுமா..? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.