தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தது தி.மு.க-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!!

5 December 2019, 9:03 pm
Minister Jayakumar Byte-Updatenews360
Quick Share

சென்னை: பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு திமுகவினர் தங்களது ஆட்சிக் காலங்களில் மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருந்து தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தனர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில் அன்னதானம் வழங்கும் விழாவினை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்து, உணவுகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால், தங்களைப் பொறுத்தவரை அவர் மறையவில்லை. அவர் காட்டிய லட்சிய பாதையில், அவர் வகுத்துத் தந்த கொள்கைகளின்படி அவருடைய கனவு அவருக்குப் பின், இன்னும் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்க வேண்டும், தமிழகத்தை ஆள வேண்டும் என்று இந்த அரசு எல்லோருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றி இயங்கி வருகிறது என்றார்.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து எத்தனையோ தலைவர்கள் தோன்றி இருக்கலாம். ஆனால், இந்தியா முழுமைக்கும் எல்லோராலும் அறியப்படுகின்ற ஒரு மாபெரும் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் எந்த காலத்திலும் மாநிலத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பது மட்டுமில்லாமல் உரிமைகளை போராடி பெற்றவர் என கூறிய அவர், பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு திமுக ஆட்சிக் காலங்களில் மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருந்து, வால் பிடித்து, சொம்பு தூக்கி, கூஜா தூக்கி தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தார்கள். கச்சத்தீவை காவு கொடுத்தார்கள், மீத்தேன், எரிவாயு, நியூட்ரினோ போன்ற திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் நம்முடைய உரிமைகளைப் பறிக்கின்ற திட்டங்கள். அவர்கள் இழந்த ஒவ்வொன்றையும் அம்மா காலத்திலிருந்து தொடர்ந்து அதிமுக மீட்டு வருவதாக அவர் கூறினார்.