தமிழக பள்ளிகளில் “ஹார்ட்டி கிளப்” : மாணவர் அமைப்பு தொடக்கம்

8 September 2019, 4:23 am
horti
Quick Share

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் என்.எஸ்.எஸ், என்.சி.சி, போன்று, “ஹார்ட்டி கிளப்”, என்கிற தோட்டக் கலை குழுக்கள் அமைக்கும் புதிய திட்டத்தை தோட்டக்கலைத் துறையினர் தொடங்கி உள்ளனர்.

மாணவர்களிடம் இருக்கும் ஆளுமைத் திறன், தனித்திறமைகளை வெளிப்படுத்தவும், சமூகத்தின் மீது அக்கறை, நாட்டுப்பற்றை ஏற்படுத்தவும் பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி., என்.எஸ்.எஸ், போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்ட்டுள்ளன.

மாணவர்களிடம் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆர்வமுள்ள மாணவர்களை எதிர்காலத்தில் விவசாயிகள் ஆக்கவும் தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகளில் ‘ஹார்ட்டி கிளப்’ எனும் தோட்டக்கலை குழு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த கிளப் மூலம் தோட்டக் கலை பயிர்களான பழங்கள், காய் கறிகள், மலர்கள், மூலிகை பயிர் கள், பணப் பயிர் மற்றும் அலங் காரச் செடிகள் தொடர்பான தொழில் நுட்பங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு இயற்கை வளங் களை பாதுகாத்திடும் வாய்ப்பும், சாகுபடி அனுபவமும் கிடைக்கும்.

இந்த திட்டம் பற்றி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது: பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்படும் குழுக்களுக்கு தோட்டக்கலைத் துறையில் டெபாசிட் தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

குழுவில் இடம் பெற்றுள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த நிதியில் தங்களது பள்ளி வளாகத்தில் தோட்டங்களை அமைத்து பராமரிக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை தோட்டக்கலைத் துறையினர் வழங்குவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தோட்டக்கலைப் பண்ணையில் “ஹார்ட்டி கிளப்”, முகாம் நடத்தப்படும்.

விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குநரகம் மற்றும் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அலுவலகங்களில் வழங்கப்படும்.

இத்திட்டம் அரசு பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும். விருப்பமுள்ள பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம், என்று அவர் கூறினார்