பரம்பரை பகையை மறந்த பசி! தாய்ப்பாசம் காட்டும் நன்றி மறவாத ஜீவன்!! (வீடியோ)

8 November 2019, 7:47 pm
Dog Milk Cat-UpdateNews360
Quick Share

பெரம்பலூர் : நாயுக்கும் பூனைக்கும் பரம்பரை பகை இருந்தும் பெரம்பலூர் அருகே நாய் ஒன்று பூனை குட்டிக்கு பால்கொடுத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கண்ணன். இவரும், இவரது மகன் சுரேஷ்குமாரும் இணைந்து கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள தங்களது தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் தங்களது தோட்டத்தில் இயற்கையான முறையில் ஆடு, மாடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகின்றனர். தோட்டப்பாதுகாப்பிற்காக கடந்த சில ஆண்டுகளாக கருப்பு என்று பெயிரிட்டு பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதே போல வீட்டில் உள்ள எலித்தொல்லையை போக்க கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பூனைக்குட்டி ஒன்றையும் எடுத்து வந்து வளர்க்கத் தொடங்கினர்.

துவக்கத்தில் நாயும் பூனையும் சண்டைப்போட்டுக்கொண்டிருந்த நிலையில் நாளடைவில் இரண்டும் நண்பர்களாக வலம் வரத்தொடங்கியது. தொடர்ந்து நாயும் பூனையும் தோட்டத்தில் விளையாடி மகிழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக நாயிடம் பூனை பால்குடிக்கத் தொடங்கியது. இதற்கு நாயும் எதிர்ப்பு தெரிவிக்காமல் தொடர்ந்து பால் குடித்து வருகிறது. பொதுவாக நாயும் பூனையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்காது, எதிரிகளாகவே பார்க்கும் நிலையில் இங்கு இரண்டும் இணைந்து நண்பர்களாக விளையாடுவது மட்டுமின்றி நாயிடம் பூனை பால்குடிப்பது அனைவரைக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை இப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.