பாரம்பரிய விளையாட்டினை விளையாடி மகிழ்ந்த சிறப்பு பள்ளி மாணவர்கள்….!!!

14 November 2019, 9:34 pm
Trichy Children's Day Festival-Updatenews360
Quick Share

திருச்சி: உறையூர் பகுதியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பாரம்பரிய விளையாட்டினை விளையாடி சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ந்தனர்.

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள எலைட் சிறப்பு பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு குழந்தைகள் ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய விளையாட்டினால் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும் வகையில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் கில்லி, பம்பரம், தாயம், சதுரங்கம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி உள்ளிட்ட விளையாட்டுக்களை மாணவ, மாணவிகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழையும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் வழங்கினார். மேலும் திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க செயலாளர் மாரி கண்ணன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், பள்ளி தாளாளர் முத்துலட்சுமி மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.