பூமிக்கு அடியில் 9 நாள் தவம், சாமியாரின் விநோத பூஜை : போலீசார் குவிந்ததால் பரபரப்பு!!

4 November 2020, 4:41 pm
Theni Priest - Updatenews360
Quick Share

தேனி : ஆண்டிபட்டி அருகே பூமிக்கு அடியில் ஒன்பது நாட்கள் தவம் இருக்கப் போவதாக கூறி குழியில் இறங்கிய சாமியாரால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் ஜெயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு மூன்றாவது நபராக பிறந்தவர் அசோக் என்ற சொக்கநாதர் (வயது 39) இவர் தனது 13வது வயதிலேயே ஊரைவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது .

இந்நிலையில் சொக்கநாதர் காசிக்கு சென்று, சிவனடியார்களிடம் , அங்கு தீட்சை பெற்று ,அகோரி முனிவராக மாறியதாக கூறப்படுகிறது. பல்வேறு நிலைகளைத் தாண்டி சிவனின் அருள் பெற்று கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தனது சொந்த ஊரான மொட்டனூத்து,கிராமத்திற்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவில் சிவபெருமானின் உத்தரவின்பேரில் அருகில் உள்ள தோட்டத்தில் பூமி பூஜைக்காக குழிக்குள் இறங்கப் போவதாக பக்தர்களிடம் தெரிவித்துள்ளார் .இந்நிலையில் நேற்று காலை தனியார் தோட்டத்தில், குழியை வெட்டி அதில் உள்ளே சிவன் படம் மற்றும் ருத்ராட்ச மாலைகளை அடுக்கிவைத்து ,உள்ளே இறங்கி தவம் செய்ய போவதாகவும் ,மேல் பகுதியை சிமெண்ட் சிலாப்புகளை வைத்து மூடி விடும்படியும் கூறி உள்ளே அமர்ந்துள்ளார். இதனையடுத்து பக்தர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர் .

இந்த தகவல் ராஜதானி போலீசாருக்கு தெரிய வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வநத் போலீசார் ஜீவசமாதி அடைய இருந்த அந்த நிகழ்ச்சியை தடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது, தான் பல வருடங்களுக்கு முன்பே காசிக்குச் சென்று விட்டதாகவும். அன்றிலிருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உணவில்லாமல் இருப்பதாகவும் , சிவனடியார்களின் தீட்சை பெற்றதால் அகோரி முனிவராக மாறியதாகவும், தனது பெயர் சொக்கநாதர் அகோர முனிவர் என்றும் கூறினார்.

மேலும் 25 வருடங்களாக தண்ணீர் குடிப்பதில்லை என்றும் சிகரெட்டு மட்டுமே குடித்து வருவதாகவும் கூறினார். தான் சாக மாட்டேன் என்றும் ,அதேசமயம் 24 வருடங்களுக்கு மு ன்பே இறந்து, பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் உயிருடன் இருப்பதாகவும் கூறினார்.

இப்பகுதியில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு சிவனின் உத்தரவின்பேரில் வந்ததாகவும், பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கோவில் திருப்பணி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, நேற்று முன்தினம் இரவு சிவன் உத்தரவின்பேரில் பூமிக்கு அடியில் ஒன்பது நாட்கள் தவம் இருக்கப்போவதாக கூறினார்.

ஒரு நாள் மட்டும் அனுமதி கொடுத்து, தவம் இருக்கும் குழியின் மேல்பகுதியை மூடிவிட வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் உத்தரவிட்டால் தொடர்ந்து 9 நாட்கள் குழிக்குள்ளே இருக்கப் போவதாகவும் கூறினார்.

தற்போது நாட்டில் பல்வேறு கொடிய நோய்கள் பிணிக்கு ஆளாகி மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல மழை பெய்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இந்த பூமி பூஜையில் இறங்கியுள்ளேன்.

தற்போது என் உருவம் உண்மையான ,எனது பிறவி உருவம் அல்ல ,நான் இப்போது பாம்பு ரூபத்தில் உள்ளேன். அகோரிகள் கோபப்பட்டால் மனிதர்கள் தாங்க மாட்டார்கள். நான் சித்தர் இல்லை அகோரி முனிவர் ஒன்பது நாள் கழித்து தீபாவளிக்கு முதல் நாள் நான் வெளியே வருவேன் என்று கூறி தொடர்ந்து பூஜையில் ஈடுபட்டார்.

கடவுளை அடைய மூன்று நிலை என்றும், ஒன்று பூமிக்கு அடியில் அமர்ந்து ஜீவசமாதி அடைவர் என்றும், இரண்டாவது காற்றில் மறைந்து விடுவது என்றும், மூன்றாவது நெருப்பில் இறங்கி மறைந்துவிடும் என்றும் கூறினார்.

இந்த பரபரப்பு தகவலை அறிந்த சுற்று கிராமத்திலுள்ள மக்கள் சாரை சாரையாக அந்த பூமி பூஜை நடக்கும் இடத்தை நோக்கி வர தொடங்கினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது .இதனையடுத்து போலீசார் சாமியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி குழிக்குள் பூமிபூஜை செய்யக்கூடாது என்றும், அதற்கு அரசு அனுமதி இல்லை என்றும், வெளியேறி வருமாறும் கூறியதையடுத்து, இரண்டு மணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு குழியிலிருந்து சாமியார் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து குழிக்கு மேலே அமர்ந்தார்.

தொடர்ந்து அவர் கூறும்போது பூமிக்கு அடியில் அமர்ந்து பூஜை செய்ய போலீசார் அனுமதி மறுத்ததால் சிவன் மற்றும் நந்தி சிலைகளை பிரதிஷ்டை செய்து அருகில் அமர்ந்து பூஜை செய்ய இருப்பதாக கூறி அமர்ந்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதாலும் மீண்டும் சாமியார் குழிக்குள் இறங்கி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 22

0

0