அணைக்கரையில் காவிரி குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்து விபத்து.. ஆற்றில் குதித்து உயிர்தப்பிய தொழிலாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
22 January 2022, 5:15 pm
Quick Share

தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரூ. 100 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர்.

தஞ்சை – விக்கிரவாண்டி இடையே 165 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை 4 வழி சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு கடந்த 2010-ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. அதன்படி 2017-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ரூ 3.517 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நான்குவழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் 3 பிரிவுகளாக பிரித்து கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் பிரிவில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கெடிலம், தென்பெண்ணை உட்பட 26 ஆற்றுப்பாலங்கள், 27 சாலை மேம்பாலங்கள் ,3 ரெயில்வே மேம்பாலங்கள், 2 கனரக வாகன நிறுத்துமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2-வது பிரிவில் சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 34 ஆற்றுப்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜெயங்கொண்டம், கூட்டுரோடு, மீன் சுருட்டி, குமாரக்குடி உட்பட 23 இடங்களில் மேம்பாலங்களும், ஒரு சுங்கச்சாவடியும் கட்டப்பட்டு வருகின்றன.

 3-வது பிரிவில் சோழபுரம் முதல் தஞ்சை வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காவிரி, வெண்ணாறு, வடவாறு உள்ளிட்ட 22 இடங்களில் ஆற்றுப்பாலங்கள், தாராசுரத்தில் ரெயில்வே மேம்பாலம், வளையபேட்டை, ராஜகிரி, திருக்கருகாவூர் உள்ளிட்ட 20 இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள கோபுராஜபுரம், மேலசெம்மங்குடி, பொன்மான் மேய்ந்த நல்லூர், சூலமங்கலம், புறக் குடி, வடக்குமாங்குடி, அருள்மொழிபேட்டை, வையச்சேரி, உதாரமங்கலம், அகரமாங்குடி, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தற்போது 4 வழி சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தஞ்சையிலிருந்து விக்கிரவாண்டி வரையிலான பயண நேரம் 5 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாகவும் குறையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் 2வது பிரிவில் சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் அருகே சோழபுரம் வரை ரூ. 1400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 34 ஆற்று பாலங்களில் தஞ்சை – அரியலூர் மாவட்டத்தை இணைக்க கூடிய சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள அணைக்கரை காவிரி ஆற்றுப் பாலம் பாலம் ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

பாலம் வேலைகள் 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி பாலத்தை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக காவிரியாற்றின் நடுவே கட்டப்பட்ட தூண்கள் மீது ராட்சத கிரேன் மூலம் பாலத்தின் மையப்பகுதியை தூக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு வெளிமாநில தொழிலாளர்கள் 15 பேர் பாலத்தை இணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது 12 அடி அகலம் 50 மீட்டர் நீளமுள்ள ராட்சத பாலத்தை ஸ்டன் ஜாக்கி கிரேன் மூலம் தூக்கி தூண்கள் மீது வைப்பதற்காக கொண்டு சென்ற போது, பாலத்தின் பாரம் தாங்காமல் கிரேன் கம்பி அறுந்து பாலம் கீழே விழுந்தது. அதனை பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் அவசர அவசரமாக தண்ணீரில் குதித்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டனர். இதில் புதிதாக கட்டப்பட்ட தூண்களும் மற்றும் பாலமும் இடிந்து சேதம் அடைந்தது.

Views: - 2388

0

0