பாழான 10000 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள்…பழுப்பேறி வண்டுகள் மொய்க்கும் அவலம்: ரேஷன் கிடைப்பதில் சிக்கல்?…சமூக ஆர்வலர்கள் குமுறல்..!

Author: Rajesh
17 May 2022, 5:07 pm
Quick Share

செங்கல்பட்டு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் சுமார் 10,000 மெட்ரிக் டன் தரமற்ற, வண்டுகள் மொய்த்த அரிசி மூட்டைகள் கண்டறியப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பல லட்சம் மக்கள் ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் இலவச அரிசியை நம்பித்தான் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் அத்தியாவசிய உணவு பொருளான ரேஷன் அரிசி தற்போது தரமற்ற முறையில் விநியோகிப்பதாக பல ஊர்களில் இருந்து புகார்கள் வந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் பொறுப்பேற்ற திமுக அரசு நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கை அளித்திருந்தது.

ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்ற கதையாக பல்வேறு நியாயவிலை கடைகளில் குப்பையில் வீச கூடிய அளவுக்கு மிகவும் தரமற்ற அரிசி விநியோகிப்பதற்காக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ,வேடப்பாளையம், மதுராந்தகம் ,வல்லம் , திருக்கழுக்குன்றம், செய்யூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் 8 கிடங்குகள் உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 800 ரேஷன் கடைகளும் ,காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 645 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றது.காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, வேடப்பாளையம், திம்மாவரம் உள்ளிட்ட கிடங்குகளில் மட்டும் சுமார் 10,000 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் பழுப்பேறி கலர் மாறி புழு மற்றும் வண்டுகள் மொய்த்து காணப்படுவதை கண்ட சமூக அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கிடங்கில் இருந்த தரமற்ற வண்டுகள் மொய்த்த அரிசி மூட்டைகளை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 1445 ரேஷன் கடைகளுக்கு அனுப்பி உள்ளனர். சுமார் 10,000 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் தரமற்று கண்டு சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியுற்றனர். அரிசி தரம் சோதிக்கும் ஆய்வாளர்களும் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனைக்குரியது.

இது மட்டுமல்லாமல் இந்த கிடங்குகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து உள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. நமது செய்தியை தொடர்ந்து ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை கிடங்கிக்கு திருப்பி எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு தரமற்ற அரிசி மூட்டைகளை அனுப்பிய கிடங்கு பொறுப்பாளர் மணியாசு என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மேற்குறிப்பிட்ட கிடங்குகளில் இருந்து சுமார் 10,000 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் தரமற்று காணப்படுவதால் மக்களுக்கு ரேஷன் அரிசி வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Views: - 761

0

0