காதலியை மறைத்து வைத்து 11 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய இளைஞன்… நீதிமன்றம் வரை சென்ற டும்டும்டும்..!!

Author: Babu Lakshmanan
18 September 2021, 4:53 pm
rahman - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : யாருக்கும் தெரியாமல் 11 ஆண்டுகளாக தனி அறையில் வசித்து வந்த கேரள மாநில காதல் ஜோடிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் திருமணம் செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அய்லூரை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள், அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் வேலாயுதன், நென்மாரா போலீஸ் நிலையத்தில் தன் மகளை மீட்டுத் தருமாறு புகார் செய்திருந்தார். போலீசார் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், சஜிதா அதே பகுதியில் உள்ள காதலன் ரகுமான் என்பவருடன் அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் வசித்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தது ரகுமான் பெற்றோருக்கும் தெரியவில்லை. காலையில் வேலைக்கு செல்லும் ரகுமான் வீட்டில் கதவை பூட்டி விட்டு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி மாதம் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரகுமான் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். இதுகுறித்து அவரது சகோதரர் பாலக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். பின்னர் கடந்த ஜூன் மாதம் ரகுமான் சகோதரர், அவர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இளம் பெண்ணோடு தனியாக வாழ்ந்து வருவதை கண்டு பிடித்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணை நடத்தியபோது, ரகுமான் தனது காதலி சஜிதாவுடன் கடந்த 11 ஆண்டுகளாக ரகசியமாக யாருக்கும் தெரியாமல் ஒரே அறையில் வசித்து வந்தது தெரிந்தது. தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியதை அடுத்து, கோர்ட் இருவரையும் சேர்த்து வாழ அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ரகுமான் -சஜிதா ஆகிய இருவரும் சட்டபூர்வமாக திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து நென்மாராவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இருவரும் சென்றனர். அங்கு சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்கான ஆவணத்தில் கையெழுத்து போட்டு திருமணம் செய்து கொண்டனர். 11 ஆண்டுகள் ரகசிய வாழ்க்கை நடத்தி சட்டபூர்வமாக திருமணம் செய்துகொண்ட ரகுமான் சஜிதா தம்பதியரை நென்மாரா தொகுதி எம்எல்ஏ பாபு நேரில் வாழ்த்தியுள்ளார்.

Views: - 278

0

0