வரும் 12ம் தேதி நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம் : கோவையில் கட்டுமான சங்கத்தினர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு

9 February 2021, 10:11 am
Quick Share

கோவை : சிமெண்ட், ஸ்டீல் விலை உயர்வைக் கண்டித்து 12ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் பல்வேறு கட்டுமான சங்கத் தொழிலாளர்கள் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

கொரோனா காலத்தில் கட்டுமானத்துறை வீழ்ச்சியடைந்திருந்த போதிலும், சிமெண்ட் மற்றும் ஸ்டீல் விலை செயற்கையாகவே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

சிமெண்ட் மற்றும் ஸ்டீல் ஆகியவற்றின் செயற்கை விலை ஏற்றத்தை கண்டித்து வரும் 12ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய கட்டுமான சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம், கோவை கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம், ஏசிசிஇ, சிஆர்இடிஏஐ, ஐஐஏ மற்றும் பிஎம்ஏ உள்பட ஏராளமான சங்கங்களும் இந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றன.

இந்த நிலையில், நாடு தழுவிய இந்தப் போராட்டம் தொடர்பாக கட்டுமானத் தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்று கோவையில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறது. தலைவர் அபிஷேக், துணை தலைவர் சி. ராம்ஜி, செயலாளர் சிடி. நாராயணன், இணை செயலாளர்கள் அருண் பிரசாத், பிரேம் குமார், சந்திரபிரகாஷ் மற்றும் பொருளாளர் அல்வார் பாபுஜி உள்ளிட்டோர் போராட்டம் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.

மேலும், ஏசிசிஇயின் தலைவர் பிரேம்குமார், பிஏஐ தலைவர் பன்னீர்செல்வம், சிசிசிஏ தலைவர் உதயகுமார், சிஇபிஏசிஏ தலைவர் பழனிசாமி, சிஆர்இடிஏர் தலைவர் சுரேந்தர் விட்டல், ஐஐஏ தலைவர் சி பிரபாகர், பிஎம்ஏ தலைவர் சம்பத்குமார் ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்கின்றனர்.

Views: - 0

0

0