13 வயது சிறுமி தீக்குளிப்பு : பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்!!
20 September 2020, 5:17 pmஈரோடு : கோபி அருகே அதிகநேரம் செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ள நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் வேலுமணி. இவருடைய மகள் ஹேமாமாலினி பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வகுப்புகள் ஆன்லைன் முறை மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹேமமாலினிக்கு படிப்பிற்காக செல்போன் வாங்கிக் கொடுத்ததாகவும் அதில் சில சமயங்களில் பாட்டு கேட்டு வந்ததாகவும் இதனால் பெற்றோர்கள் அறிவுரை சொல்லி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வேலுமணி மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்றிருந்த நிலையில், சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவி ஹேமாமாலினி உடல் முழுவதும் எரிந்த நிலையில் இறந்து கிடந்ததாகவும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 13 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது