13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: சடலத்தை மீட்டு தீவிர விசாரணை

12 June 2021, 9:54 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாய் தந்தை இல்லாததால் பாட்டியிடம் வளர்ந்த வந்த 13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் சடலத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் மதுசூதன் என்பவர் தன்னுடைய மனைவி பவித்ரா மற்றும் ஹாசினி, பிரியதர்ஷினி என இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு மனைவி பவித்ரா இறந்துவிட்டார். அதில் மதுசூதன் மீது பவித்ராவின் தந்தை ரகுகாந்தி புகார் கொடுத்து அதன்பேரில் மதுசூதன் சிறைக்கு அனுப்பப்பட்டார். மதுசூதனனின் இரண்டு பெண் குழந்தைகளையும் பவித்ராவின் தாய் ஜெயந்தி, தந்தை ரகுகாந்தி ஆகியோர் சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோட்டிஸ்வரர் கோவில் தெருவில் உள்ள தன்னுடைய வீட்டிற்க்கு அழைத்து வந்து வளர்த்து வந்தனர்.

மதுசூதன் கடந்த 5 வருடமாக என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. தாத்தா பாட்டி கட்டுப்பாட்டில் வளர்ந்து வந்த சிறுமிகளில் மூத்த மகள் ஹாசினி பிஎம்எஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பும் தங்கை பிரியதர்ஷினி ஆறாம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாத்தா ரகுகாந்தி மரணமடைந்துவிட்டார். பவித்ராவின் தம்பி திலீப் ராஜ் , பவித்ராவின் அம்மா ஜெயந்தி ஆகியோர்கள் 2 சிறுமிகளையும் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாசினி பூப்பெய்தியதால் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என பாட்டி ஜெயந்தி கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை பாட்டி ஜெயந்தியும் பேத்தி பிரியதர்ஷினியும் வீட்டின் மாடியில் பேசிக்கொண்டிருந்தபோது முதல் தளத்தில் உள்ள அறையில் ஹாசினி புடவையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. ஹாசினியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு திலிப் ராஜ் கொண்டு சென்றார். ஹாசினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் ஹாசினி பூப்பெய்தி உள்ளார், இந்நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு ஹாசினி செல்ல மாட்டார் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஹாசினுக்கு பாலியல் தொந்தரவு அளித்து அதன்மூலம் இந்த மரணம் ஏற்பட்டதா என்ற ரீதியிலும் விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Views: - 135

0

0