13 வது முறையாக ரூ.10ஆயிரம் அளித்த யாசகர் : கொரோனா நிதியளித்த கொடை வள்ளல்!!

15 September 2020, 11:37 am
Beggar Man Fund - updatenews360
Quick Share

மதுரை : 13 வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக யாசகர் வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மனைவி இறந்தபின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம்கொண்டார்.

இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற 10ஆயிரம் பணத்தை கடந்த சில மாதங்களாக கொரோனா நிவாரண நிதியாக வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இன்று 13 வது முறையாக 10ஆயிரம் ரூபாயை வசூல் செய்து அதனை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார். இது வரைக்கும் ரூபாய்1,30,000 வழங்கியுள்ளார்.

மேலும் இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சையெடுத்த பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இவருடைய சேவையை பாராட்டி ஆட்சியர் விஜய் சுதந்திர தினத்தில் விருது வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.