ஆண் குழந்தைக்கு தாயான 17 வயது சிறுமி: கணவனை போக்சோவில் கைது செய்த போலீசார்!!

Author: Aarthi Sivakumar
8 September 2021, 5:08 pm
Quick Share

சேலம்: இடைப்பாடி அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து தாயாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள வேம்பனேரி செங்கழனி வலவு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரை பெற்றோர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி சேர்த்தனர்.

அன்றிரவு சிறுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 18 வயது பூர்த்தி அடைவதற்குள் சிறுமிக்குத் திருமணம் நடந்திருப்பதும், அதற்குள் அவர் தாயாகிவிட்டதையும் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள், சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

இதுகுறித்து, காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். 12ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியும் அவர்மீது காதல் வயப்பட்டுள்ளார்.

காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஆண்டு வீட்டைவிட்டு ஓடிச்சென்ற அவர்கள், சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு உள்ளூரில் தனியாக ஒரு வீடு எடுத்து, காதல் தம்பதியினர் குடும்பம் நடத்திவந்தனர்.

இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்து, கர்ப்பமாக்கியதாக சக்திவேல் மீது குழந்தை திருமணச் சட்டம் மற்றும் போக்சோ சிறப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்தனர். இச்சம்பவம் வேம்பனேரி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 372

0

0