நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி பணம் மோசடி : தலைமறைவான மேலும் ஒருவர் கைது..!!
Author: kavin kumar12 January 2022, 1:36 pm
ஈரோடு: ஈரோட்டில் காய்கறி சந்தை உறுப்பினர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடி வரை மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் அ.தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர்கள் ஆவர். இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 800 சதுர அடியில் வீட்டு மனை நிலம் வாங்கி தருவதாக தெரிவித்து குறிப்பிட்ட தொகையை வசூல் செய்துள்ளனர். சுமார் 350-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பணம் கட்டி ரசீது பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து சங்க பொறுப்பாளர்கள் 2016-ம் ஆண்டு ஈரோடு அருகே உள்ள நசியனூர் பகுதியில் 20½ ஏக்கர் நிலத்தை வாங்கி அவர்களது பெயரிலும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் பத்திரப்பதிவு செய்து கொண்டு, சங்க உறுப்பினர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பணம் செலுத்திய சங்க உறுப்பினர்கள் இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சங்க தலைவர் பிபிகே பழனிசாமி, சங்க செயலாளர் முருகசேகர், சங்க பொருளாளர் வைரவேல், சங்க துணைத்தலைவர் குணசேகரன், சங்க துணைச்செயலாளர் ஆறுமுகம் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் என 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சங்க பொருளாளர் வைரவேல், வினோத்குமார் ஆகிய 2 பேரை கைது செய்யப்பட்ட நிலையில், சங்க துணை செயலாளர் ஆறுமுகம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
0
0