வங்கியில் பணம் எடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து திருடர்களுக்கு வலைவீச்சு

Author: Babu Lakshmanan
7 May 2022, 1:11 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த ஒய்வு பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலிசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (73). ஒய்வு பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியரான இவர், நேற்று மாலை தனது தேவைக்காக லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று 2 லட்சம் ரூபாய் பணம் எடுத்து கொண்டு, தனது இருசக்கர வாகனத்தின் பெட்டிக்குள் அதனை வைத்து கொண்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்போது, அவர் வழியில் நின்று ஒரு கடையில் இளநீர் குடித்துவிட்டு, பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, தனது வாகனத்தின் பெட்டிக்குள் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், அவர் இது குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.

அதில் சந்தேகப்படும்படியாக மர்ம நபர் ஒருவர் ராமநாதன் வங்கிக்குள் செல்லும் நேரத்தில் தொப்பி அணிந்து கொண்டு வங்கியின் உள்ளே சென்று அனைவரையும் நோட்டமிடுவதும், பின்னர் வெளியே வந்து இன்னொருவர் உடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பி செல்வதும் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, அந்த இருவர் தான் ராமநாதனை பின் தொடர்ந்து அவர் இளநீர் அருந்தும் நேரம் பார்த்து, அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை திருடி எடுத்து சென்று இருக்கக் கூடும் என சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார், அந்த இரண்டு மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 605

0

0