தனியார் காகித ஆலையில் இயந்திரத்தில் சிக்கி 20 வயது இளைஞர் பலி : சோகத்தில் மூழ்கிய சக ஊழியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2022, 5:31 pm
Sathy Paper Industry Dead- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே செயல்பட்டு வரும் ஆண்டாள் காகித ஆலையில் உள்ள காகிதம் உலர்த்தும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே ஆண்டாள் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கொத்தமங்கலம், தயிர்பள்ளம் பகுதியை சேர்ந்த அன்புசெல்வன் என்ற இளைஞர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் காகித ஆலையில் உள்ள இயந்திரத்தின் அருகே அன்புசெல்வன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மறுசுழற்சி செய்வதற்காக பழைய காகிதங்களை அரவை செய்து காகிதங்களை உலர்த்தும் இயந்திரத்தில் எதிர்பாராத விதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்ட அவருடன் பணியாற்றும் பணியாளர்கள் உடனடியாக காகித ஆலை நிர்வாகத்தினருக்கும், பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

20 வயதே ஆன இளைஞன் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 682

1

0