234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் : கெத்து காட்டும் சீமான்..!!
1 March 2021, 5:54 pmசென்னை : வரும் சட்டபேரவையில் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பேரியக்கம் கடந்த 11 ஆண்டுக் காலத்தில் இந்நிலத்தில் ஏற்படுத்திய தாக்கமும். அதிர்வுகளும் அபரிமிதமானது, அசாதாரணமானது. தனது தனித்துவமிக்க முன்னுதாரணமான முற்போக்கு அரசியலால் தமிழக அரசியலின் போக்கையே மொத்தமாய் மாற்றி, அரசியல் திசையைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருக்கிறது என்பது மறுக்கவியலா பேருண்மை.
எங்களது முன்னோர்களும், இந்நிலத்தில் இதற்கு முன்பாக மாற்று அரசியல் முழக்கத்தை முன்வைத்தவர்கஞும் சமரசங்களுக்கு ஆட்பட்டு. திராவிடக் கட்சிகளிடம் கரைந்துபோன வரலாற்றுத் தவறுகளிலிருந்து பாடம் கற்ற நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அதனைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதிபூண்டு, சமரசமின்றி திமுக, அதிமுக எனும் இருபெரும் திராவிடக் கட்சிகளையும் எதிர்த்துக் களம் காண்கிறது.
தற்போது தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் மக்களை அரசியல்படுத்தி, அதனாடே வாக்குகளைப் பெற்றுச் சனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, இச்சட்டமன்றத் தேர்தலிலும் வழமைபோல மக்களையும் மகத்தான தத்துவத்தையும் நம்பி, தனித்தே களமிறங்குகிறது. ஆணும், பெண்ணும் சமம் என்னும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சரிபாதி
தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி வரலாற்றைப் புரட்டிப்போட காத்திருக்கிறது
பாதையைத் தேடாதே: உருவாக்கு! எனும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது உயரியக் கூற்றுக்கு, உயிரூட்டும் விதத்தில் உலகெங்கும் வேர்பரப்பி வாழுகிற மக்கள் இராணுவமான நாம் தமிழர் கட்சிக்கு மகத்தான ஆதரவினையும், வாக்குகளையும் வழங்கி, அதிகாரத்தில் ஏற்றி வைக்க வேண்டியது ஒவ்வொரு இனமானத் தமிழரின் தார்மீகக் கடமையாகிறது.
வருகிற மார்ச் 07 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 3 மணியளவில் சென்னை இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிடவிருக்கிறோம். அந்நிகழ்வில் பெருந்திரளெனக் கூடி, நமது வெற்றியை முரசறிவிக்க வேண்டுமென இனமானத் தமிழர்களை அழைக்கிறோம், என தெரிவித்துள்ளார்.
0
0