இரிடியம் மோசடி…நாடகமாடி ரூ.3 லட்சம் கொள்ளை: 3 பேர் கைது..கோவையில் பரபரப்பு..!!

Author: Rajesh
5 May 2022, 5:08 pm
Quick Share

கோவை: கோவையில் இரிடியம் மோசடி வழக்கில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் என்பவரை இரிடியம் உள்ளதாக கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் வரவழைத்துள்ளார். மேலும் விலை மதிப்பு மிக்க இந்த இரிடியத்தை வாங்க ரூ.30 லட்சத்துடன் வருமாறும் கூறியுள்ளார்.

இதனை நம்பி, மனோகரன் ரூ.30 லட்சம் பணத்துடன் தனது கார் ஓட்டுனர் வேலு என்பவருடன் கடந்த ஏப்ரல் 18ம் தேதி கோவை வந்து சிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

அப்போது மாலை 7 மணியளவில் மனோகரன் தங்கியிருந்த அறைக்கு வந்த 2 மர்ம நபர்கள், தாங்கள் போலீஸ் எனக்கூறி மனோகரனை மிரட்டியதோடு, அவரிடமிருந்து ரூ.30 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

சுதாரித்துக்கொண்ட மனோகரன், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் ஓட்டுனர் வேலுவிடம் விசாரணை நடத்தினர்.

முதலில் முன்னுக்கு பின் முரணாக பேசிய வேலு, பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

பணத்துடன் மனோகரன் கோவை வருவதை அறிந்து கொண்ட வேலு, தனது நண்பர்களான தேனியை சேர்ந்த நிர்மல்செல்வன் மற்றும் வினோத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி அன்று மாலை வேலு, வெளியே சென்ற போது, மனோகரன் தனியாக இருக்கும் தகவலை கூட்டாளிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த இருவரும் மனோகரனை மிரட்டி, பணத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வேலு உட்பட மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.7.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூவரும் கொள்ளையடித்த பணத்தில் ஒரு தொகையை, கோவையை சேர்ந்த இருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து, மனோகரனை இரிடியம் இருப்பதாக கூறி கோவை வரவழைத்தது யார்? மீத பணம் யாரிடம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 617

0

0