குட்டையில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி : வேலூரில் சோகச் சம்பவம்..!

Author: Babu Lakshmanan
19 September 2022, 1:59 pm
Quick Share

வேலூர் : குட்டையில் குளிக்கச்சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே அப்துல்லாபுரம் ரிக்க்ஷா காலனியை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன்கள் ஆகாஷ் (வயது 12), ஹரிஷ் (11) இவர்கள் இருவரும், அப்துல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மகன் இமானுவேல்(13). காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சிறுவர்களின் தந்தைகள் இருவரும் வேலூரில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்கள். இந்த நிலையில், சிறுவர்கள் 3 பேரும் அங்குள்ள சாய்பாபா கோவில் பின்புறம் அமைந்துள்ள குட்டைக்கு நேற்று மாலை குளிக்க சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்து சென்ற தங்களது குழந்தைகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களை தேடி சென்ற பெற்றோர், அங்குள்ள குட்டை பகுதியில் கரையில் சைக்கிள் மற்றும் உடைகள் இருந்ததை பார்த்த போது, அங்கு தங்களது குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற அச்சத்துடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரில் தேடிய போது ஆகாஷ், ஹரிஷ் இருவரின் உடல்களும் அவர்களுக்கு கிடைத்தது. பதறிப்போன அவர்கள் இருவரையும் தூக்கிக்கொண்டு பொய்கையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, இம்மானுவேல் உடலையும் மீட்டு வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மூன்று பேரின் உடல்களையும் பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று பேரும் இறந்ததாக தெரிவித்தனர்.

இதனிடையே, தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், 3 சிறுவர்களும் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 664

0

0