காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பல்லக்கில் 3 கிலோ வெள்ளி தகடு மாயம் : பக்தர்கள் அதிர்ச்சி!!

8 November 2020, 10:35 am
Kanchi Temple 1 - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பல்லக்கில் 3 கிலோ வெள்ளி தகடு மாயம் என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தங்கம் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த நகைகளை 3 மாதத்திற்கு ஒருமுறை, நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஒவ்வொரு கோயிலாக சென்று ஆய்வு செய்வது வழக்கம்.

அந்த ஆய்வின்போது, கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நகை, ஏற்கனவே உள்ள நகை விவரங்களை அறிக்கையாக இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகை சரிபார்ப்பு அலுவலர்கள், ஆய்வு பணிக்கு செல்வதில்லை. இது தொடர்பாக புகார் வந்தால் மட்டுமே ஆய்வு செய்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறப்பு பெற்று விளங்கும் பழமையான ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள, ஆபரணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தர்கள் சார்பில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தொடர்ந்து, அக்டோபர், 13ம் தேதி, அறநிலையத் துறை துணை ஆணையர் தலைமையில், நகை சரிபார்ப்பு அலுவலர் எஸ்.எஸ்.குமார், துணை அலுவலர் சுப்பிரமணி, உதவி தொழில்நுட்ப அலுவலர் ஹரிஹரன் ஆகியோர் உள்ளடக்கிய குழு ஆய்வை துவங்கியது.

கோவிலில் உள்ள பல சன்னிதிகளில், சுவாமிக்கு அணிவிக்கும் ஆபரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.இந்நிலையில், வெள்ளி சம்பந்தப்பட்ட பொருட்களை, ஆய்வுக் குழுவினர், நேற்று சரிபார்த்தனர். அப்போது, 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வெள்ளி தகடு பொருத்தப்பட்ட பல்லக்கில் இருந்த, வெள்ளி தகடுகள் காணாமல் போனது தெரியவந்தது.

அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்தப் பல்லக்கு, 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு முறை ஆய்வின்போது, என்னென்ன பொருட்கள் கோவிலில் இருக்கின்றன என, அதன் பட்டியலை பார்த்து, அந்த பொருட்களை எடை போடுவோம்.

அப்போது இருக்கும் எடை அளவை பதிவு செய்வோம். அதன்படி, வெள்ளி தகடு பொருத்தப்பட்ட பல்லக்கை, ஆய்வு செய்தோம். அதில், 1954ல் நடந்த ஆய்வின்போது, அந்த பல்லக்கில், 11 கிலோ எடையுடைய வெள்ளித் தகடு பொருத்தப்பட்டு உள்ளதாக கணக்கில் உள்ளது.

தற்போது நடத்திய ஆய்வில், 8.800 கிராம் வெள்ளி மட்டுமே இருந்தது. 3 கிலோ மாயமானது குறித்து, ஆணையருக்கு தெரியப்படுத்துவோம். அவர்கள் தான், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பர் என கூறினார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 24

0

0