கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை : கோவை அருகே சோகம்!!

5 November 2020, 10:17 am
Cbe Suicide - Updatenews360
Quick Share

கோவை: கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவமுருகன் (50), பால் வியாபாரி. இவர் மனைவி வைரராணி (45). இவர்களது மகள்கள் யுவஸ்ரீ (வயது 22), ஹேமா (வயது 19). யுவஸ்ரீ கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

சிவமுருகனுக்கு கடன் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். தொடர்ந்து இன்று அதிகாலை குடும்பத்தினருடன் சேர்ந்து விஷம் பிடிக்க முடிவு செய்தார்.

வைரராணி, யுவஸ்ரீ ஆகியோர் விஷத்தை முழுவதுமாக குடித்தனர். ஹேமா சிறிதளவு குடித்துவிட்டு என்னால் குடிக்க முடியவில்லை என விஷத்தை தூக்கி வீசி விட்டார். மற்றவர்கள் விஷம் குடித்து முடித்த நிலையில் சிவ முருகனும் விஷத்தை குடித்து விட்டார்.

நான்கு பேரும் வீட்டுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அக்கம்பக்கத்தினர் பால் கேட்டு சிவமுருகனை அழைத்துள்ளனர். அவர் எந்த பதிலும் தராத நிலையில் வீட்டு ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது நான்கு பேரும் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது சிவமுருகன், வைர ராணி , யுவஸ்ரீ ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. ஹேமா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இவரை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.‌

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோவையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 20

0

0