3 மாத குழந்தையை நிரந்தரமாக தூங்க வைத்த தாய்! பாலில் விஷம் கலந்து கொன்ற கல்நெஞ்சுக்காரி!!

By: Udayachandran
9 October 2020, 11:38 am
Villupuram Mother Arrest - Updatenews360
Quick Share

விழுப்புரம் : குடும்ப வறுமையின் காரணமாக பாலில் விஷத்தை கலந்து கொடுத்து பெண் குழந்தையை கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா (வயது 32). இவருடைய மனைவி யாஸ்மின் என்கிற விஷ்ணுப்பிரியா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த சூழலில் யாஸ்மினுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆலையபானு என்று பெயர் சூட்டினர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று இரவு, 3 மாத குழந்தையாக இருந்த ஆலையபானுவுக்கு அவரது தாய் யாஸ்மின், பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது குழந்தை மயக்க நிலையில் இருந்தது. உடனே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச்சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் குழந்தையின் உடல்கூறுகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் பரிசோதனை முடிவுகள் வந்தது.

அதில் குழந்தைக்கு வழங்கப்பட்ட பாலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோரை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில், குழந்தைக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்ததை யாஸ்மின் ஒப்புக்கொண்டார்.

மேலும் விசாரணையில் யாஸ்மின் கணவர் சாதிக்பாஷா, ஒரு தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கினால் தனியார் பேருந்துகள் ஓடாததால் வருமானமின்றி பெரிதும் தவித்தார். அவருடைய குடும்பமும் மிகவும் வறுமையில் வாடியது. இதனால் வெவ்வேறு இடங்களுக்கு கூலி வேலைக்கும் சென்றுள்ளார்.

இருந்தபோதிலும் போதிய வருமானமின்றி அவரது குடும்பம் தவித்தது. ஏற்கனவே சாதிக்பாஷா , யாஸ்மின் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் 3 வதாக பிறந்த குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் எப்படி 3 குழந்தைகளையும் வளர்த்து கரைசேர்க்க போகிறோம் என்று எண்ணி யாஸ்மின் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டு வந்தார்.

இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக கைக்குழந்தையை கொலை செய்ய முடிவு செய்த யாஸ்மின், சம்பவத்தன்று இரவு பாலில் பூச்சி மருந்தை கலந்து குழந்தைக்கு கொடுத்து தூங்க வைத்துள்ளார். பாலை குடித்த குழந்தை சிறிது நேரத்திலேயே இறந்துள்ளது.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், குழந்தையின் தாய் யாஸ்மினை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

Views: - 49

0

0