பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை: வக்கீல் உள்பட 3 பேர் கைது…!!

11 November 2020, 12:30 pm
cctv car - updatenews360
Quick Share

திருப்பூர்: பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வக்கீல் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்த சீனிவாசன். பனியன் நிறுவன உரிமையாளரான இவரது மனைவி மற்றும் மகள் சென்னையில் உள்ள மகனை பார்க்க சென்றுள்ளார். இதற்கிடையே கடந்த 1ம் தேதி காலை சீனிவாசன் நடைபயிற்சிக்காக வெளியே சென்றுள்ளார்.

நடைபயிற்சி முடித்து வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 80 சவரன் நகை மற்றும் ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த காரின் பதிவு எண்ணைவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சீனிவாசனின் வீட்டில் வசிக்கும் வேன் டிரைவரான அண்ணாமலை, சீனிவாசனிடம் பணம் அதிகமாக இருப்பதால், இதனை கொள்ளையடிக்க அவரது நண்பரான திருச்சி பெட்டவாய்தலை பகுதியை சேர்ந்த ஆம்புலன்சு டிரைவரான மணிகண்டன், நாகராஜன் மற்றும் ஸ்டீபன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு வக்கீல் மனோஜ்குமார் என்பவர் திட்டம் தீட்டி கொடுத்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வக்கீலான மனோஜ்குமார் மற்றும் மணிகண்டன், அண்ணாமலை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், வக்கீலிடமிருந்து 53 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்.

மேலும், கொள்ளை வழக்கில் தொடர்புடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாகராஜ் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Views: - 33

0

0