தமிழகத்தை உலுக்கிய நீட் : ஒரே நாளில் 3 பேர் தற்கொலை..!

13 September 2020, 9:34 am
Quick Share

நீட் நுழைவு தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால், நேற்று ஒரே நாளில் மதுரையை சேர்ந்த மாணவி, தர்மபுரி, திருச்செங்கோடைச் சேர்ந்த 2 மாணவர்கள் என அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 2016ஆம் ஆண்டு சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017 முதல் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்து வருகிறது. அதே நேரம், நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலை தொடர்கிறது. அரியலூர் அனிதா நீட் தேர்வு காவு வாங்கிய முதல் மாணவி. அவரை தொடர்ந்து, விழுப்புரம் பிரதீபா, சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி, கோவை சுபஸ்ரீ என நீட் மரணங்கள் தொடர்கின்றன.

இன்த சூழலில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மருத்துவ நுழைவு தேர்வுத்து தயாராதி வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கடந்த சில நாட்களுக்கு முன், மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அலை ஓய்வதற்குள், நேற்று மதுரையில் ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்தார். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் தர்மபுரியை சேர்ந்த ஆதித்யாவும் அவரை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். அதே சமயம் நீட் தேர்வு அல்ல வாழ்கையில் எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டு வெற்றியோ தோல்வியோ மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

Views: - 0

0

0