3 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் : 50 வயது நபருக்கு 27 ஆண்டு சிறை.. சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2021, 2:13 pm
Judgement- Updatenews360
Quick Share

சென்னை : மூன்று வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 50 வயது நபருக்கு 27ஆண்டு சிறை தண்டனை விதித்து , சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை வியாசர்பாடி யைச் சேர்ந்தவர் ரவி (வயது 50) கடந்த 2018ல் தான் குடியிருந்த வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்த தம்பதியின், மூன்று வயது குழந்தையை தன் வீட்டுக்கு அழைத்து சென்று அந்த குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

தனக்கு வலி இருப்பதாக மறுநாள் குழந்தை கூறியதையடுத்து பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது ரவி தன்னிடம் நடந்து கொண்ட விபரத்தை குழந்தை கூறி உள்ளது. இது குறித்து குழந்தையின் தாயார் அளித்த புகாரின் பேரில் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ரவியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி குழந்தையை கடத்தி சென்ற குற்றச்சாட்டுக்காகவும், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காவும் ரவிக்கு 27 ஆண்டு சிறை தண்டனையும் , 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு, நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும் , தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Views: - 632

0

0