கோவை மாவட்ட கண்காணிப்பாளருக்கு கொரோனா : இன்று 490 பேருக்கு தொற்று உறுதி

13 September 2020, 8:54 pm
corona virus new 13- updatenews360
Quick Share

கோவை: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட 490 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்ததுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருளரசு பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் இவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் கோவை அரசு மருத்துவமனை ஆண் மருத்துவப் பணியாளர், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த இரு காவலர்கள் மற்றும் ராமநாதபுரம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, விளாங்குறிச்சி, பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், குனியமுத்தூர், சுந்தராபுரம், கணபதி மாநகர், காரமடை, சூலூர் உள்பட பகுதிகளை சேர்ந்த 490 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் மீண்டும் இன்று பாதிப்பு உயர்ந்துள்ளது. மேலும், இன்று 4 பேர் பலியாகியுள்ளனர்.இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் என்ணிக்கை 353 ஆக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 554 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0