அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் மேலும் 5 பேர் மீது குண்டர் சட்டம்

8 May 2021, 11:05 pm
Quick Share

அரக்கோணம்: அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் மேலும் 5 பேர் மீது குண்டர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூரை சேர்ந்தவர் அர்ஜுனன் (25). இதேபோல் செம்பேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா(27). நண்பர்களான இருவரும், கடந்த மாதம் 7ஆம் தேதி அன்று சித்தாம்பாடி பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது அடித்து கொல்லப்பட்டனர்.இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாள்ராஜபேட்டை பகுதியை சேர்ந்த சத்யா, அஜித், மதன், சுரேந்தர், நந்தா, சூர்யா மற்றும் சாலை கைலாசபுரத்தை சேர்ந்த 2 பேரை கைதுசெய்தனர். இதன் தொடர்ச்சியாக,பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த சிவா உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதனையடுத்து, கைதான 11 பேரும் வேலூர் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இரட்டை கொலையில் தொடர்புடைய, சத்யா, அஜித், மதன், சுரேந்தர், கார்த்தி, ராஜசேகர், சூர்யா ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட எஸ்.பி., சிவக்குமார் பரிந்துரை வழங்கி இருந்தார். அதனை ஏற்றி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று 7 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் இன்று மேலும் 5 பேர் மீது குண்டர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 125

0

0