தொடர் செயின் பறிப்பு ஈடுபட்ட 5 பேர் கைது: 120 பவுன் நகைகள் மீட்பு….

Author: kavin kumar
15 October 2021, 10:34 pm
Quick Share

மதுரை: மதுரையில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 120 பவுன் நகைகளை மீட்டனர்.

மதுரை மாநகர பகுதிகளான தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ்.எஸ்.காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்துசென்ற பெண்கள், முதியவர்கள், வாகனத்தில் சென்ற பெண்கள் என அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் மாநகரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இரு தனிப்படை காவலர்களை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.இதனையடுத்து விசாரணையை திவீரபடுத்திய தனிப்படையினர் கிருஷ்ணாபுரம் காலனி பகுதியை சேர்ந்த வைரமணி என்ற இளைஞர் சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதிசெய்த நிலையில் அவனது செல்போன் எண் மூலமாக இருப்பிடத்தை கண்டறிந்து சென்னையில் இருந்தபோது கைது செய்தனர்.

இதனையடுத்து அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வைரமணி மாநகரில் 13 இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவனிடமிருந்து 33 லட்சம் மதிப்பிலான 90பவுன் நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இரு பைக்குகளையும் போலிசார் பறிமுதல் செய்தனர். மேலும் வைரமணிக்கு உதவிய அவனது நண்பன் பாலசுப்ரமணியனையும் கைது செய்தனர். இதேபோன்று மாநகரில் மேலும் 8செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய கல்மேடு் பகுதியை சேர்ந்த பழனிகுமார் மற்றும் சிவா , விஜய் ஆகிய மூன்றுபேரையும் கைது செய்த போலிசார் அவர்களிடமிருந்தும் 11லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகையையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.மதுரை மாநகரில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 4கொள்ளையர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 120பவுன் நகைகள் பறிமுதல் செய்த தனிப்படை காவலர்களை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டு தெரிவித்தார்.

செயின்பறிப்பு கொள்ளையர்கள் கைது குறித்து செய்தியாளர்களை சந்தி்த்து பேசிய மாநகர காவல்துறை துணை ஆணையர் ராஜசேகரன் பேசுகையில்,”தனிப்படை காவலர்கள் தீவிர முயற்சியால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டுள்ளது.செயின்பறிப்பில் ஈடுபடுவதற்காகவே ஆந்திராவில் சென்று பைக்ரேஸ் பயிறசி மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது.இதில் சிசிடிவி கேமிராக்கள் தான் முக்கிய ஆவணமாக இருந்தது என்பதால் பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் நிறுவனங்களில் தரமான சிசிடிவி கேமிராக்களை அமைத்து பொதுமக்களுக்கு ஒத்துழைப்ப அளிக்க வேண்டும் என்றார்.

Views: - 675

0

0