6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி.. கேரளாவுக்கு தொடரும் கடத்தல் : 4 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2021, 12:51 pm
ration rice - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் சமயபுரம் சாமியார் தோட்டம் பகுதியில் கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த சுமார் 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியினை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்வதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திற்கு வந்த ரகசிய தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து சிறுமுகை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜபிரபு,மதுவிலக்கு உதவி ஆய்வாளர் சசிகுமார், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினரின் தீவிர வேட்டையில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சமயபுரம் சாமியார் தோட்டம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் ரேஷன் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து 120 மூட்டைகளில் இருந்த சுமார் 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பின்னர்,ரேஷன் அரிசியை கடத்தியதாக மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த ஷாகுல் ஹமீது (வயது 45),கடத்தலுக்கு உதவியதாக திருப்பூரை சேர்ந்த டிரைவர் சேகர், மேட்டுப்பாளையம் காந்திபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (வயது 22), மணிகண்டன் (வயது 20) உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.

பின்னர்,கைது செய்யப்பட்ட நால்வர்,பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 6 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக மேக்ஸிமோ பிக் அப் வாகனத்தையும் கோவை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

மேட்டுப்பாளையம் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதும், பிடிபட்டு வருவதும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 439

0

0