தம்மம்பட்டியில் விறுவிறு ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை ஆவேசத்துடன் அடக்கிய வீரர்கள்…!!

6 February 2021, 4:17 pm
salem jallikattu - updatenews360
Quick Share

சேலம்: தம்மம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன் அடக்கி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. இந்தப் போட்டியினை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் வீரர்கள் உறுதிமொழி எடுத்த பின் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் ஆத்தூர் சேலம், திருச்சி,பெரம்பலூர், அரியலூர், துறையூர், கள்ளக்குறிச்சி, முசிறி , தொட்டியம், கோவை, கரூர், மதுரை, திண்டுக்கல் ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சின்னசேலம், மல்லியகரை கீரிப்பட்டி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, வாழப்பாடி அயோத்தியாபட்டினம், மங்களபுரம், புத்திரகவுண்டம்பாளையம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 750 காளைகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் காளைகள் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டது. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். வீரர்கள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு களமிறக்கப்பட்டனர். ஆவேசமாக துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து வந்த மாடுகளை திமிலைபிடித்து மல்லுகட்டிய வீரர்கள் மடக்கி பிடித்தனர். இதில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அந்த பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள் பிளாஸ்டிக் சேர், சில்வர் அண்டா போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க ஆண்களும், பெண்களும் என குடும்பத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்கள் மாடு வரும் போதும், அதனை அடக்க முற்படும் போதும் கை தட்டியும், கோ‌ஷமிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆத்தூர் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Views: - 1

0

0