நீட் தேர்வில் 97% கேள்விகள் தமிழக பாடத்திட்டத்திலிருந்து தான்..! மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

16 September 2020, 10:44 am
NEET_Checking_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள், இந்த ஆண்டு நீட் தேர்வில் கிட்டத்தட்ட அனைத்து கேள்விகளையும் உள்ளடக்கியுள்ளன. நீட் 2020 வினாத்தாளின் பகுப்பாய்வில் புதிய பாடப்புத்தகங்கள் 97% கேள்விகளை உள்ளடக்கியுள்ளன.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தப்படாமல் இருந்த தமிழக பள்ளி பாடத்திட்டத்தை மாநில அரசு திருத்தி, 2018-19’ஆம் ஆண்டில் பதினொன்றாம் வகுப்புக்கும், 2019-20’ல் பன்னிரெண்டாம் வகுப்புக்கும் புதுப்பிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்தியது.

கொரோனாவால் நான்கு மாத தாமதத்திற்குப் பிறகு, நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13’ஆம் தேதி நடைபெற்றது. பாட வல்லுநர்கள் குழு கேள்வித்தாளை ஆராய்ந்து, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளின் பக்க எண்களை வழங்கியுள்ளது.

பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் பாடப்புத்தகங்கள் 180 கேள்விகளில் 173’ஐ உள்ளடக்கியுள்ளன. இது 2017’ஆம் ஆண்டிலிருந்து ஒரு பெரிய முன்னேற்றமாக உள்ளது. பழைய பாடத்திட்டங்களில் வெறும் 60% கேள்விகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது 60%’க்கும் அதிகமான கேள்விகள் பாடப்புத்தகங்களிலிருந்து நேரடி கேள்விகள் என்பதால் பாடப்புத்தகங்களுடன் மட்டுமே தயாரிக்கும் ஒரு சராசரி மாணவர் கூட இந்த ஆண்டு நீட்டில் 300’க்கு மேல் மதிப்பெண் பெறுவர் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

“தமிழக மாநில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள் சிபிஎஸ்இ மாணவர்களை விட தாழ்ந்தவர்களாக உணரக்கூடாது. புதிய பாடப்புத்தகம் இடைவெளியைக் குறைத்துள்ளது. இரண்டுமே சமமாக உள்ளன.” என்று மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த இயற்பியல் துறையின் தலைவர் பேராசிரியர் ரீட்டா ஜான் கூறினார்.

மாநில வாரிய பாடப்புத்தகங்கள் இயற்பியலில் 99% கேள்விகளை உள்ளடக்கியது. உயிரியல் பிரிவில் உள்ள 90 கேள்விகளில் 87 கேள்விகள் மாநில வாரிய பாடப்புத்தகங்களால் உள்ளடக்கப்பட்டன.

“வினாத்தாளின் பகுப்பாய்வில், இந்த ஆண்டு நீட்டில் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களை விட மாநில வாரிய உயிரியல் பாடப்புத்தகங்கள் அதிகமான கேள்விகளை உள்ளடக்கியுள்ளன” என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) துணை இயக்குநர் எஸ்.ஷமீம் தெரிவித்தார்.

வேதியியலில், 45 கேள்விகளில் 43 கேள்விகள் பாடப்புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டன. “மாணவர்கள் பாடங்களைப் புரிந்து கொண்டால், அவர்கள் 45 கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும்” என்று ஒரு பாட நிபுணர் கூறினார்.

“பாடத்திட்டத்தில் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து புதிய பாடப்புத்தகங்கள் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளன மற்றும் மேலும் அறிய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிற ஆன்லைன் ஆதாரங்களுக்கு வழிவகுக்கும்” என்று ஷமீம் கூறினார்.

தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் போட்டியிட முடியாது என தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தமிழக அரசு சத்தமே இல்லாமல் மேற்கொண்ட மாற்றம் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.

Views: - 17

0

0